Tuesday, March 30, 2021

உருவாய் அருவாய் உளதாய்  இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

இந்தப் பாடலை என் வாழ்வில்  சிறுவயது முதல் பலமுறை படித்து இருக்கிறேன் பல முறை கேட்டும் இருக்கிறேன். அடடா என்னமா எழுதி இருக்கிறார் ஒவ்வொரு சொல்லும் "வாய்" என்று முடியும்படி என்று வியந்தும் இருக்கிறேன்

இத்தனை வருடம் ஆனது அதன் உள்ளே பொதிந்து கிடக்கும் பொருளை நான் உணர்ந்து கொள்ள.....

முதலில் அருஞ்சொற் பொருளை பார்த்து விடுவோம் அப்புறம் அர்த்தத்துக்குப் போவோம்.

பொருள் / கருத்து.

உருவாய் = உருவத்துடன்

அருவாய் = உருவம் இல்லாமல்

உளதாய் = இருக்கக் கூடியதாய்

இலதாய் = இல்லாததாய்

மருவாய்  = மலரின் வாசமாக

மலராய் = மலராக

மணியாய் = மணியாக

ஒளியாய் = மணியில் இருந்து வரும் ஒளியாக

கருவாய்  = கருவாக

உயிராய்  =உயிராக

கதியாய் =  வழியாக  

விதியாய் = விதியாக

குருவாய் = குரு வடிவில்

வருவாய் = வருவாய்

அருள்வாய் = அருள் செய்வாய்

குகனே = முருகா

கடினமான சொல் ஒன்றும் இல்லை.

இதில் என்ன புதிதாக கண்டுவிட்டேன் என்று கேட்கிறீர்களா?

"குருவாய் வருவாய்"

நாம் இறைவனை உண்மையை தேடி அலைகிறோம்  நிறைய புத்தகங்கள் வாசிக்கிறோம் பலர் சொல்வதைக் கேட்கிறோம் நமக்கு இவர் தான் குரு ஆச்சாரியார்  என்று ஒருவரை ஏற்றுக் கொண்டு அவர் சொல்கிற படி கேட்கிறோம் துறவிகள் சாமியார்கள் உபன்யாசம் செய்பவர்கள் என்று எவ்வளவோ பேர்  இப்போதெல்லாம் youtube வந்து விட்டது வீட்டில் இருந்த படியே  அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொள்ள முடியும்

இருந்தும் ஒன்றும் ஆன மாதிரி தெரியவில்லை அது ஒரு பாட்டுக்கு போகிறது வாழ்க்கை இன்னொரு பக்கம் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது

#அருணகிரிநாதர் சொல்கிறார்

"நீ குருவை தேடி அலையாதே  குரு உன்னைத் தேடி வருவார் நீ எப்போது பக்குவப் படுகிறாயோ அப்போது  குரு உன்னைத் தேடி வருவார்" என்று

ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் "The teacher will appear when the student is ready" என்று

நீங்கள் தேடி கண்டுபிடிக்கும் யாரும் உங்கள் குரு அல்ல உங்களுக்கு எப்படித் தெரியும் அவர் தான் குரு என்று?

"வருவாய்" அவனே வருவான்.

வருவான் என்று எப்படி சொல்ல முடியும்? என்ன உத்தரவாதம் இருக்கிறது?

'கதியாய் விதியாய்"

"உன் விதிப்படி அவன் வருவான் உனக்கு எப்போது விதித்து இருக்கிறதோ  அப்போது வருவான் வந்து உன்னை நல்ல கதிக்கு கொண்டு செல்வான். "

சரி, எப்படி வருவான்?  எந்த வடிவில் வருவான் ?

எனக்கு எத்தனையோ குரு மார்கள் பாடம் சொல்லித் தந்தவர்கள் சிலர் வாழக்கையை சொல்லித் தந்தவர்கள் சிலர் வழி கட்டியவர்கள் சிலர் அவன் எப்படி  வேண்டுமானாலும் வருவான்

புரியலையே !

"உருவாய்"

அவன் மானிட உருவில் வருவான்

"அருவாய்"

உருவம் இல்லாமல் வருவான் அது எப்படி உருவம் இல்லாமல் வருவான்? அப்படி வந்தால்  நாம் எப்படி அவனை அறிய முடியும்?

ஒரு உயர்ந்த புத்தகத்தை வாசிக்கிறீர்கள் நல்ல சொற்பொழிவை கேட்கிறீர்கள் நல்ல எழுத்தை வாசிக்கிறீர்கள்...உங்களுக்குள் ஏதோ ஒன்று நிகழ்கிறது சே இது தெரியாமல் இத்தனை நாள் வாழ்ந்து விட்டேனே.. இனியாவது  கொஞ்சம் மாற வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அல்லவா.... அந்த எழுத்துதான் உங்கள் குரு அதற்கு மானுட வடிவம் இல்லை ஒளி வடிவம் ஒலி வடிவில் வந்து அருள் தருவான்

mp3 file, youtube வீடியோ,search Engine  என்று ஏதோ ஒரு வழியில் அருவமாக வந்து அருள் தருவான்

மருவாய், மலராய்

மலர் தெரியும், அதன் வாசம் தெரியுமா? சில சமயம் வாசம் மட்டும் வரும், எங்கிருந்தோ  அது போல ஆள் தெரியாது எங்கிருந்து எப்படி வருகிறது என்று தெரியாது  அவன் அருள் வந்து சேரும்

மணியாய் ஒளியாய்

மணி தெரியும் அதன் உள்ளே ஆடும் அதன் நா தெரியும் அது ஆடுவது தெரியும் ஒலி தெரியுமா காதில் வந்து விழும்  ஒரு வார்த்தை ஒரு சொல் ஒரு வாக்கியம் 

"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே"

என்று ஒரு வாக்கியம் பட்டினத்தாரை மாற்றிப் போட்டது

அந்த வாக்கியம் தான் அவருக்கு குரு

அந்த வாக்கியம் நமக்கு கிடைத்து இருந்தால் சரி வராட்டி போகட்டும் அதனால் என்ன என்று ஓலையை தூக்கி குப்பையில் போட்டு விட்டு வேலையை பார்க்க போய் விடுவோம்.   பட்டினத்தாரின் மனம் பக்குவப் பட்டிருந்தது  ஒரு வாக்கியம் அருள் செய்தது

"அருள்வாய் குகனே"

அது அருள்தான்  காசு கொடுத்து வாங்க முடியாது வண்டி வண்டியாக புத்தகங்களை படித்து  அறிய முடியாது அந்த அருள் grace வர வேண்டும்

அவனே அருள்வான்

ஞான சம்பந்தருக்கு மூன்று வயதில் வந்தான்.

திருநாவுக்கரசருக்கு 80 வயதில் வந்து அருள் தந்தான்.

என்ன சொல்லுவது?

யார் குரு என்று எப்படி அறிவது?

ஆதி சங்கரருக்கு புலையனாக வந்தான்.

சங்கரர் அறிந்தார் இல்லை.

அவர் பாடே அப்படி என்றால் நாம் எம்மாத்திரம்?

மாணிக்க வாசகருக்கு அருள் புரிய குருந்த மரத்தடியில்  ஈசர் காத்து கிடந்தார்...

அவன் உருவாய், அருவாய், உளதாய், இலதாய் , மருவாய், மலராய், மணியாய், ஒளியாய் எப்படி வேண்டுமானாலும் வருவான்.

அவன் வந்தால்தான் உண்டு நாம் போய் கண்டு பிடிக்க முடியாது

மனம் பக்குவப் பட வேண்டும்.

நீங்கள் தேடிப் பிடித்த எந்த குருவும் உங்கள் உண்மையான குரு அல்ல என்று தெரிகிறது அல்லவா? அவர் வேண்டுமானால் வழி காட்டலாம் அவர் ஒரு படியாக இருந்து உதவி செய்யலாம்.... உண்மையான குரு அவர் உங்களைத் தேடி வருவார்.

ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏

சிவ ஓம் நமசிவாய 🙏🌺🙏

அகிலம் போற்றும் அண்ணாமலையார் பொற்பாதங்களுக்கு கோடானுகோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏

ஆலவாய் அரசனே போற்றி போற்றி 🙏🙏🙏

 

No comments:

Post a Comment