Wednesday, March 10, 2021

 சிவ கீதை

🌀🌀🌀

(பகுதி-16)


ஸ்ரீ ராமரின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன், தேவர் முதலியவர்களை தனது தேகத்திலேயே உபசங்கரித்துக் கொண்டு விஸ்வரூபத்தை ஒடுக்கிக்கொண்டார். ஈசனை உணர்ந்து நமஸ்கரித்தபடி அவர் அருகில் அமர்ந்திருந்த ரகுவரனை தோக்கி எம் பெருமான் ""எவற்றை எல்லாம் கேட்க விருப்பமோ அவற்றையெல்லாம் கேள் ராமா... உனக்கு என்னிலும் அந்நியராய் குரு இல்லையன்றோ"" என அன்பு ததும்பக் கூறினார்.

                                                  

இத்துடன் சிவகீதையின் ஏழாவது அத்தியாயம் நிறைவடைந்து "பிண்டோத்பத்தி கதனம்" எனும் எட்டாவது அத்தியாயம் ஆரம்பமாகின்றது. இதனை வைராக்கிய யோகம் என்றும் அழைப்பர். இங்கு தேகத்தின் தோற்றம் அழிவுகளைப் பற்றி ராமர் வினவ, பரமேஸ்வரர் அதற்கு நான்கு வித தேகநிலைகளைக் கூறி பிறப்பு, இறப்பு ரகசியங்களை விளக்கி பரவைராக்கியத்தை ஏற்படுத்துகின்றார்.


          வாருங்கள் அந்த தெய்வீக உரையாடலில் நாமும் கலந்துகொள்வாம்....👬👬


பக்தியுடன் சமர்ப்பிக்கப்படும் புஷ்பங்களைப் போல் தன் ஒவ்வொரு சந்தேகங்களையும் பகவானிடம் பவ்வியமாகக் கேட்டார் பகலவன் குலத் தோன்றல். ஸ்ரீ ராமர் ஈசனை நோக்கி "பாஞ்சபௌதிகமாகிய(பஞ்சபூத விகாரம்) ஸ்தூல தேஹத்திற்கு உற்பத்தி - ஸ்திதி - ஒடுக்கம் - தேகத்தின் ஸ்வரூபம் இவை எப்படி? ஓ... பகவானே நீரே தெளிவுபடுத்த வேண்டும்" என்று கூறினார்.


விளக்க ஆரம்பித்தார் விஷ்வேஸ்வரர்.


பாஞ்சபௌதிகமாகிய இத் தேஹமானது பஞ்ச பூதங்களால் உண்டாகியது. இச்சரீரத்தில் உள்ள பூதங்களுள் பிருதிவியே(நிலம்) முக்கியம். பாஞ்சபௌதிகமாகிய இப் பார்த்திவ தேஹமானது,

1. கருப்பையில் நின்றுண்டாவது - ஜராயுஜ

2. முட்டையில் நின்றுண்டாவது - அண்டஜ

3. புழுக்கத்தில் நின்றுண்டாவது - ஸ்வேதஜ

4. வித்தில் நின்றுண்டாவது - உத்பிஜ

                                            என்று நான்கு விதமாக அமைந்துள்ளது. 

                                            மனம் எண்ணுகிறபடி உண்டாவதாய் மற்றுமோர்(ஐந்தாவதாக) சரீரம் உள்ளது. அது தேவர்களிற்கு மட்டுமே உரியது. பூவுலகில் நான்கு வகை தேஹங்கள் மட்டுமே காணப்படுவதால், ஓ... ராமா நான் முதலில் ஜராயுஜத்தைப் பற்றிக் கூறுகின்றேன் கவனமாகக் கேட்பாயாக.


1. ஜராயுஜம்.


     சுக்லசோணிதங்களால் ஏற்பட்ட நிலைமையுடையதே ஜராயுஜம் எனப்படும். ருதுகாலத்தில் எப்போது ஸ்திரீகளின் கர்ப்பகோசத்தில் சுக்கிலம் பிரவேசிக்கின்றதோ, ஸ்திரீயின் சோணிதத்தோடு கலந்ததாய்க் கொண்டு அச்சுக்லமே ஜராயுஜமாகின்றது. சோணிதம் விசேஷமாய் இருந்தால் பெண்ணும், சுக்லம் விசேஷமாயின் ஆணும் உண்டாகும். சுக்லசோணிதங்கள் சமமாயிருப்பின் ஆணும் பெண்ணுமற்ற ரூபம் தோன்றும். 

     

ஸ்திரி நான்காம் தினத்தில் ருது நீங்கிச் சுத்தையாவாள். பின் பதினாறு நாள் வரையில் ருதுகாலம் என்பது குறிக்கப்பட்டது. ஆண்டு ஒற்றைப்படைத் தினத்தில் பெண்ணும், இரட்டைப்படைத் தினத்தில் ஆணும் தோன்றும். அழகுவாய்ந்த மங்கைக்குப் பதினாறாவது தினத்தில் கர்ப்பம் ஏற்படுமாயின் அந்தப் பிரஜை சக்கரவர்த்தியாகவோ அல்லது அரசனாகவோ பிறக்கின்றான்.


ருது நீங்கி ஸ்னானம் செய்ததும் மங்கை எந்தப் புருஷனது முகத்தை விருப்புற்று நோக்குகின்றாளோ, அந்தப் புருஷனது வடிவம் போன்ற உருக்கொண்டதாய் கர்ப்பம் ஏற்படும். ஆதலால் தனது கணவனது முகத்தையே பார்க்க வேண்டும்.


ஸ்திரீயின் தோலுருவாகிய சிறியபையே ஜராயு எனப்படும். யாதொரு காரணத்தால் அதிலேயே சுக்லசோணிதங்களின் சம்பந்தம் ஏற்பட்டு அங்கு கர்ப்பம் உண்டாகின்றமையால் ஜராயுஜமென்று இந்த வகை தேகங்கள் அழைக்கப்படுகின்றன. (ஜராயுஜங்களே பொதுவாக முலையூட்டிகள்.)


2. அண்டஜங்கள்


பறவைகள், பாம்புகள் போன்றன இந்த வகையில் அடங்கும். அதாவது முட்டையில் இருந்து வெளிப்படும் அங்கிகள்.


3. ஸ்வேதஜங்கள்


கழிவுகளில் இருந்து வெளிப்படும் அங்கிகள்.


4. உத்பிஜங்கள் 


மரம், செடி, கொடி முதலியன.

அதாவது தாவரங்கள் இந்த வகையினுள் அடங்கும்.


தொடரும்....


🌷🌷🌷சர்வம் சிவார்ப்பணம்🌷🌷

No comments:

Post a Comment