ஒளவையாருக்கும் வள்ளலாருக்கும் என்ன ஒற்றுமை ?மற்றும் வேற்றுமை? என்பதை பற்றிய ஒரு ஆய்வு பதிவு!
இருவரும் இயற்றிய செய்யுள்களிலிருந்து இதை பதிவிடுகின்றேன்.
ஔவையார் இயற்றிய உலக நீதி செய்யுள்.
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதா¨வை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்
நெஞ்சாரப்பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
சினந் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந் திருந்தார் வாசல் வழிச் சேரல் வேண்டாம்
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தை தனை மறக்க வேண்டாம்
முற் கோபக்காரரோடிணங்க வேண்டாம்.
பத்து வயது கூட நிரம்பாமல் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஒரு சிறிய மாணவனாக இருந்த வள்ளலார் பெருமானுக்கு வேண்டாம் என்ற எதிர்மறையான வார்த்தைகளை கூற விரும்பாமல் 'வேண்டும்','வேண்டும்' என ஒரு நேர்மறையான கருத்துக்களை கூறும் பாடலை பாடினார்
இது நடந்தது மிகவும் பழைய காலமல்ல,150 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த ஒரு சம்பவம்
பத்து வயது கூட நிறைவடையாமல் ஒரு சிறிய மாணவனாக பள்ளியில் படித்துக்கொண்டிருந்த வள்ளலார் பெருமானுக்கு பிறவியிலேயே ஞானம் மிகுதியாக இருந்தது.
ஒரு முறை அவரது ஆசிரியர் மாணவர்களுக்கு ஔவையாரின் ஆத்திச்சூடியை சொல்லிக்கொடுக்கிறார்
"ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்"
மாணவனாக இருந்த வள்ளலார் மட்டும் ஆத்தி சூடியை சொல்ல வில்லை.
ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது
"ஏண்டா வாயை திறக்க மாட்டேங்குற"
"வேண்டாம், வேண்டாம் என்று சொல்லபிடிக்கவில்லை அய்யா, வேண்டும் வேண்டும் என இதை மாற்றிப்பாடலாம் அல்லவா" என்கிறார் வள்ளலார்
ஆசிரியர் திகைத்தார்,அவரின் திகைப்பு அடங்கும் முன்னரே,
சின்னஞ்சிறு பிள்ளையான வள்ளலார் கீழ்கண்டவாறு பாடுகிறார்
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
ஔவையார் 'வேண்டாம்' என எதிர்மறையாகவும்,வள்ளலார் 'வேண்டும்' என நேர்மறையாகவும் என நீதி கருத்துக்களை பாடியது இருவருக்குமுள்ள வேற்றுமை!
ஔவையாரும் வள்ளலாரும் நல்ல நீதி கருத்துக்களை பாடியது இருவருக்குமுள்ள ஒற்றுமை.
அதைவிட இருவருமே தமிழ்ஞான கடவுளான முருகனின் தரிசனம் பெற்றவர்கள் என்பது இருவருக்குமுள்ள பெரிய ஒற்றுமை.
ஔவையாருக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?எனக்கேட்டு முருகப்பெருமான் தரிசனம் கொடுத்தார்.
வள்ளலாருக்கு முருகப்பெருமான்
கண்ணாடியில் தரிசனம் கொடுத்தார்.
ஔவையார், வள்ளலார் இருவருமே சித்தர்களுக்கு எல்லாம் சித்தனான முருகப்பெருமானிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்தியவர்கள் என்பது மறுக்க முடியாத ஒற்றுமை!
No comments:
Post a Comment