🔯பிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம், அதற்குறிய ஆன்மீக பரிகாரகுறிப்புகளும்.
🔯புதிய தகவல்கள்.
ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளின் மூலம் பலன் சொல்ல முடியும். அந்தக் கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
🔯ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் :
ஞாயிறன்று பிறந்தவர்கள் கடின வேலைகளை எளிதாக முடிக்கும் திறமை பெற்றவர்கள். இரக்க குணத்துடன் மற்றவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். இயல்பான தலைமை பண்புகளுடன், அதிகாரம் செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். யாரையும் ஏமாற்ற விரும்பாமல், நேர் வழிகளில் முயற்சிகளை அமைத்துக்கொள்வார்கள்.
ஒரு விஷயத்தை தன்னால் செய்ய முடியும் அல்லது முடியாது என்பதை சொல்லிவிடுவார்கள். அவ்வப்போது உணர்வுகளால் தூண்டப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிடுவதால், குழப்பமான மனநிலை இவர்களுக்கு வந்து செல்லும். பல நேரங்களில் மவுனமாக இருந்து விடுவது இவர்களது வழக்கம்.
ஆன்மிக குறிப்புகள் :
ஞாயிறன்று அதிகாலையில் ‘ஆதித்ய ஹ்ருதயம்’ பாராயணம் செய்வது ஆரோக்கியமான வாழ்வை உண்டாக்கும். ஈன்ற தந்தை மற்றும் ஆன்றோர்களின் ஆசிகளை அவ்வப்போது பெற்று வரவேண்டும். தெய்வ வழிபாட்டில் கோதுமை பண்ட நைவேத்தியம் சிறப்பு. ஆடைகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களை தவிர்ப்பதோடு, இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணியலாம். கிழக்கு திசையானது பலவிதங்களில் பயன் தருவதாக இருக்கும். அரசு துறையில் காரிய வெற்றி பெற விரும்புபவர்கள் சூரிய ஹோரை காலத்தில் தமது முயற்சி களை செய்தால் வெற்றி கிடைக்கும்.
🔯திங்கட்கிழமை பிறந்தவர்கள் :
வேடிக்கையான பேச்சோடு, பல விஷயங்கள் அறிந்தவர்களாகவும், சாந்தம், சகிப்புத் தன்மை, பெரியவர் களிடம் மரியாதை, கடவுள் பக்தி போன்ற குணங்களும் உடையவர்கள். ஞாபக சக்தியும், நடக்கும் விஷயத்தை முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும், கற்பனை சக்தியும் உடையவர்கள். மென்மையான குணங்கள் இருப்பதால் எதிரிகளையும் நண்பர்களாக நினைப்பார்கள்.
சலனமுள்ள எண்ண ஓட்டம் காரணமாக திடமான முடிவுகள் எடுப்பதில் தடுமாறுவார்கள். ஒவ்வொரு காரியத்தையும் ஆலோசனை செய்வதில் கால தாமதம் உண்டாக்கி கொள்வார்கள். எதிர்ப்புகளை துணிச்சலாக எதிர்கொள்வார்கள். சுயநலம் இல்லாததால் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்திப்பார்கள். பழைய விஷயங்களை அடிக்கடி நினைத்துக்கொண்டு கவலை அடைவார்கள்.
ஆன்மிக குறிப்புகள் :
திங்கட்கிழமை அதிகாலையில் பெற்ற தாயை வணங்கி, ஆசிகளை பெற்றுக்கொண்டு, வெள்ளை நிற பூக்களால் அம்பாள் வழிபாடு செய்வதோடு கற்கண்டு கலந்த நைவேத்தியமும் படைப்பது சிறப்பு. சந்தன நிறம், ஐவரி நிறம், வெள்ளை ஆகிய நிறத்தில் ஆடைகள் அணிவது சிறப்பை தரும். பெண்பாலரிடம் சண்டை சச்சரவுகள் இல்லாது பார்த்துகொள்வது முக்கியம். கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
🔯செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் :
நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதோடு, அறிவு பெற்றவர்களாகவும், கலை ரசிகர்களாகவும், விநோத பிரியர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் கருத்தை அப்படியே அங்கீகரிக்காமல் தமக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள். வெகுளியாகவும், கபடம் இல்லாமல் எல்லா விஷயங்களையும் நண்பர்களிடம் மனம் திறந்து சொல்வார்கள். அன்புக்கு உரியவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் துணிச்சலாக உதவி செய்வார்கள்.
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களுக்கு
அவர்கள் சொல்வதும், செய்வதும் சரி என்ற மனப்போக்கு உடையவர்கள். அதனால் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர் களுக்கு கெட்டவராகவும் நடக்கும் இயல்பு கொண்டவர்கள். அதனால் பலரது வெறுப்பை சம்பாதித்துக்கொள்வார்கள். உணர்ச்சி வயப்படுபவர்களாக இருப்பதால், அன்போ, வெறுப்போ அதீதமாக காட்டக்கூடியவர்கள்.
ஆன்மிக குறிப்புகள் :
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அரளிப்பூ மாலை கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால், வாழ்வு வளம்பெறும். அன்று மாலை ஸ்ரீபைரவருக்கு துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு. உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வது முக்கியம். சிவப்பும், மஞ்சளும் இருக்கும்படி ஆடைகளை அணிவது அதிர்ஷ்ட அலைவீச்சை உண்டாக்கி வெற்றிகளை தரும். நிதானம்தான் இவர்களுக்கு எப்போதும் வெற்றி தரக்கூடியது.
🔯புதன்கிழமை பிறந்தவர்கள்
அறிவின் கூர்மையோடு, பல திறமைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். ரகசியங்களை வாழ்நாள் முழுவதும் காப்பதோடு, மற்றவர் உணர்வுகளை புரிந்து செயல்படுவார்கள். இளமையான தோற்றத்துடன் இனிமையாக பேசும் திறமை பிறர் ரசிக்கும்படி இருக்கும். அறிவாற்றல் காரணமாக எந்த பிரச்சினைகளிலும் சிக்குவதில்லை. வேலைகளை பொறுப்போடு கச்சிதமாக செய்து முடிப்பார்கள்.
மற்றவர்களது கருத்துக்களை சார்ந்து தமது செயல்களை வரையறுத்துக்கொள்ளும் மனநிலை கொண்டவர்கள். அதனால், பலரிடமும் ஒரு விஷயம் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியில் சொல்லமாட்டார்கள். மற்றவர்கள் பார்வையில் இவர்கள் காரியவாதிகளாக தென்படுவது இவர்களது குறையாக இருக்கும்.
ஆன்மிக குறிப்புகள் :
புதன்கிழமை அதிகாலை துளசி, கல்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு, மகாவிஷ்ணுவை வழிபடுவதோடு, பாசிப்பயறு சுண்டல் நைவேத்தியத்துடன், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதும் சிறப்பு. தாய் மாமன் அல்லது ஒன்று விட்ட மாமன் ஆகிய உறவுகளிடம் புதனன்று ஆசிகள் பெறுவது நல்லது. பச்சை மற்றும் இளநீலம் கலந்த நிறங்கள் ஆடையில் இருக்குமாறு தேர்ந்தெடுத்து அணிவது பல நன்மைகளை உண்டாக்கும். வியாபார துறையில் இருப்பவர்கள் மரகத கல்லை அணிவது அல்லது வீடுகளில் வைத்து பூஜை செய்வதன் மூலம் வெற்றி உண்டாகும்.
🔯வியாழக்கிழமை பிறந்தவர்கள்
இவர்கள் குரு ஆதிக்கம் உள்ளவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளும் கொண்டு, பேச்சிலும் எழுத்திலும் ஆற்றல் மிக்கவர்கள். தெரிந்த வித்தைகளை முழு மனதுடன் பிறருக்கு கற்று கொடுப்பவர்கள். நல்லவர்களிடம் சுமுகமாக பழகுவதோடு, அத்து மீறுபவர்களை கண்டிக்கும் தைரியசாலிகள். தன்னை சார்ந்தவர்களை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். சுயநலம் பாராமல் உதவி செய்யக் கூடிய குணத்துடன், உண்மை, நீதி, நியாயம் ஆகியவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பார்கள்.
முன்கோபம் உடையவர்களாக இருப்பதால் வார்த்தைகள் கடுமையாக இருக்கும். பின்னர், கோபம் தணிந்து அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள் தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பினால் பல துன்பங்களை அடைவது இவருக்கு வழக்கம். பிறருடைய செயல்கள் பற்றிய மாற்று கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள்.
ஆன்மிக குறிப்புகள் :
வியாழக்கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்னர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்து, அவருக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொண்டை கடலை சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசேஷமானது. வியாழனன்று ஆசிரியர்களை வணங்கி ஆசிகள் பெறுவது அவசியம். தங்க நிறம் ஆடைகளில் பிரதானமாக இருப்பது இவர்களுக்கு சாதகமான சூழல்களை ஏற்படுத்தும். வியாழக்கிழமை பூச நட்சத்திரம் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை செய்வது பல நன்மைகளை தரும்.
🔯வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள்
சுக்ரன் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் கலைகளில் நாட்டத்துடனும், எதிர் பாலினத்தவரை கவரும் இயல்புடனும் இருப்பார்கள். பேச்சால் மற்றவர்களை தன் வயப் படுத்தி வேலைகளை செய்து முடிப்பார்கள். குடும்ப உறவுகள் இவருக்கு உறுதுணையாக இருக்கும். சுகவாசிகளாக இருப்பார்கள்.
பொறுமைசாலியாக தென்பட்டாலும், சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு. சிந்தனை மற்றும் செயல் ஆகியவற்றில் நிதானமாக இருந்தாலும், அசட்டு தைரியம் இருக்கும். மற்றவரின் மனதை புண்படுத்தக்கூடிய அளவிற்கு கேலியும், கிண்டலும் கலந்து பேசி விடுவார்கள். எந்த காரியத்திலும் லாப நஷ்டத்தை ஆராய்ந்து பார்த்து செயல்படும் இயல்பு உடையவர்கள்.
ஆன்மிக குறிப்புகள் :
வெள்ளிக்கிழமை அதிகாலையில் மல்லிகைப் பூக்கள் கொண்டு ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்து அம்பிகையை வழிபடலாம். பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்வது விசேஷம். முக்கியமான விஷயங்களுக்கு, வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிந்து சென்றால் வெற்றி நிச்சயமாகும். வெள்ளியன்று வரக்கூடிய சுக்ர ஹோரை காலமானது இவர்களுக்கு ஆன்மிக வெற்றிகளை தரக்கூடியது.
🔯சனிக்கிழமை பிறந்தவர்கள்
பொறுமையுடனும், நீதி நேர்மையுடனும் தமது வேலைகளை முடித்து விட்டுத்தான் மற்றவை பற்றி எண்ணுவார்கள். பெரியோர்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர்களாக இருப்பதோடு, தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருப்பார்கள். பிறருடைய கஷ்டங்களை இவர்களால் தாங்க முடியாது. தன்னை ஒருவர் ஏமாற்றி விட்டாலும், தமது பாதையில் தொடர்ந்து நடப்பவர்கள்.
சனி ஆதிக்கம் காரணமாக ஆழ்ந்த சிந்தனை செய்து கொண்டிருப்பதால், முகத்தில் எப்பொழுதும் கவலை குடிகொண்டிருக்கும். எதையும் கூர்ந்து ஆராய்ந்து பார்த்து, அதன் சாதகமான பலனை அறிந்த பின்னரே காரியத்தில் ஈடுபடுவார்கள். நினைத்ததை சாதிக்கும் பிடிவாத குணம் உடையவர்கள்.
ஆன்மிக குறிப்புகள் :
சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து நீல சங்குப்பூ, வில்வம் சாற்றி சிவபெருமானை வழிபடுவது நல்லது. ஆலய மூலஸ்தானத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றுவது சிறப்பு. பூஜைக்கு பிறகு காகத்துக்கு எள் கலந்த நெய் சாதம் வைப்பதோடு உடல் ஊனமுற்றவர்களுக்கு தானம் அளிப்பதும் முக்கியம். கடன் தரக்கூடிய தொழிலில் இருப்பவர்கள் அதிக வட்டி வாங்கினால் கர்ம வினையின் பாதிப்புகள் வந்து சேர்ந்து விடும் காரணத்தால், வட்டி விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆடைகளில் நீலம் சார்ந்த வண்ணங்களை பயன்படுத்துவது பல நன்மைகளை தரும்.
No comments:
Post a Comment