#நோய்_நம்_உடலில்_இல்லை
#அது_நம்_மனதில்தான்_இருக்கிறது
உங்களுக்கே தெரியாத உங்களை பற்றிய சில உளவியல் உண்மைகளை புரிய வைக்கஒரு கதை!!
ஒரு பெரிய நாட்டின் மன்னன் தனது
நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தான் .
ஒரு நாள் இரவு... தொலைதேசத்தில் ஒரு ராணுவப்பாசறையில் தங்கியிருந்த மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது .
திடுக்கிட்டு எழுந்தான் .
காதில் இருந்த பூச்சியை எடுக்க
மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்
அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை
சில வீரர்களை அழைத்துக்கொண்டு தலைநகரத்திற்குத் திரும்பினான் மன்னன் .
ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான் .
அவரும் எவ்வளவோ பாடுபட்டார் .
தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன
மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள்.
எதற்கும் பலன் இல்லை .
மன்னனின் காதில் உள்ள பூச்சி பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரம்மாண்டமான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள், ஆனால் யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை .
மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்ததால்,
அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை
உணவு சாப்பிடுவது குறைந்து
மன்னன் தன் பொலிவு இழந்தான் .
ராஜ கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன் ,
இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப் போல் காணப்பட்டான்
எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான் .
தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதாக உணர்ந்தான் .
பதினான்கே வயதான அவனுடைய மூத்த மகனுக்கு அவசர கதியில் வாள்பயிற்சி, குதிரையேற்றம் எல்லாம் கற்பிக்கப்பட்டது .
இந்த நேரத்தில் இமய மலையிலிருந்து
ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வந்தன .
பட்டத்து ராணி அந்தத் துறவியைப் பார்க்க சென்று அவருடைய காலில் விழுந்து கதறினாள்.
தன் கணவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினாள்
அரண்மனைக்கு வந்து சேர்ந்த துறவி
மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார் .
பின் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்தார்.
அன்று மாலை அரசனையும் அரசியையும் தனியாகச் சந்தித்துப் பேசினார்
"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே!
நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது .
இங்கிருந்து நூறு மைல் தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும் .
இன்றே என் சீடர்களை அனுப்பி அந்த மூலிகையை கொண்டு வர செய்கிறேன்,
அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்." என்றார்.
அந்த மூலிகையை எப்படி இனம் கண்டுகொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொல்லி,
தன் சீடர்களில் சிறந்தவர்கள் இருவரை அனுப்பி வைத்தார் துறவி
அவர்களுக்குக் குதிரையேற்றம் தெரியுமாதலால் அவர்கள் பயணத்திற்குச் சிறந்த அரபிக் குதிரைகளைக் கொடுத்து அனுப்பினான் மன்னன் .
கூடவே, அவர்கள் பாதுகாப்பிற்காகச் சில வாளேந்திய வீரர்களையும் அனுப்பி வைத்தான் .
மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்.
அது 'ராஜ மூலிகை' என்பதால்
அதை வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லி விட்டார் .
மறுநாள் காலை விடிவதற்கு முன்னால்
பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது
அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது .
மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி .
துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன்.
சில நாட்கள் அரண்மனையில் தங்கியிருந்தார் துறவி
மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான் .
நன்றாக உண்டான்,
பழைய பொலிவு திரும்பி விட்டது
துறவி விடை பெற்றுக்கொண்டார் .
அவருக்கும் அவரது சீடர்களுக்கும்
உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன்
அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும்
துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்
""குருதேவா...!!! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...!!!''
மற்றொரு சீடனின் கேள்வி வேறு விதமாக இருந்தது .
"மூலிகையைவிட அந்தப் பூச்சி இன்னும் அற்புதமாகத் தோன்றுகிறது .
ஒரு மனிதனின் காதிற்குள் புகுந்து அத்தனை நாள் உயிருடன் இருந்து
அவனைப் பாடாய்ப் படுத்தி வைத்தது என்றால், அது மிகவும் விசேஷமான பூச்சியாக இருக்க வேண்டும்..
அதைப் பற்றிச் சொல்லுங்களேன் என்றான்
'துறவி புன்னகை பூத்தார் !
"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?
மன்னனின் செவிக்குள் .
அதுதான் இல்லை
மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம் .
போன சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும்,
இல்லை வெளியே வந்திருக்கும்
அந்தச் சிறிது நேரத்தில்
அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை
ஏற்படுத்திவிட்டது .அந்த மன்னனின் மனதில் அது குறுகுறுப்பு உணர்வை ஆழமாகப் பதிந்துவிட்டது
எனவே அந்தப் பூச்சி காதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்
"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே...???''
மனோவியாதியை அப்படி எளிதாகக் குணப்படுத்திவிட முடியாது அப்பனே....!!!
பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான் .
அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன் .
தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன் .
அந்த மூலிகை நம் ஊரில் சாதாரணமாக விளையும் திருநீற்று பச்சிலைதான் .
ஆனால் அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்
பின் ஒருநாள் பூஜை செய்து
காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு
ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன் .
மன்னன் நம்பி விட்டான் அவன் நோயும் தீர்ந்தது.
சீடர்கள் வியப்புத் தாளாமல் தங்கள் குருவைப் பார்த்தார்கள்.
இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை
நம் மனங்களில் தான் இருக்கின்றன.
காதில் நுழைந்த பூச்சி செத்துவிட்டாலும், மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது
இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையை தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
"எங்கப்பாகிட்ட மட்டும் பணம் இருந்தா,
நான் பெரிய ஆளாகியிருப்பேன்''
என்று எத்தனை பேர் ஜம்பமடிக்கிறார்கள் பாருங்கள்
ஆனால் இன்று பெரிய ஆட்களாக இருக்கும் பலரும்,
காசில்லாத தகப்பனுக்குப் பிறந்தவர்கள் தான் .
பிரச்னை நம் பெற்றோரிடமோ,
நம் ஆசிரியரிடமோ,
நம் பள்ளி-கல்லூரியிடமோ,
நம் சூழ்நிலையிலோ இல்லை .
அது நம் மனதில் இருக்கிறது
பூச்சி காதில் இல்லை ,மனதில் இருக்கிறது .
ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தில்
மதிய உணவு இடைவேளையில் அதிகாரிகள் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருந்தார்கள்
ஒருநாள், அவர்களுக்குள் ஒரு போட்டி.
கனமான ஒரு பொருளை (மேஜையில் காகிதங்கள் பறக்காமல் இருக்க வைக்கப்படும் பேப்பர் வெயிட்) தலையில் வைத்தபடி சிறிது தூரம்நடக்க வேண்டும் .
அதன்படி ஒரு அதிகாரியின் தலையில் பேப்பர் வெயிட்டை வைத்தார்கள்
அந்த அதிகாரி பாவம், தலையில் இருக்கும் பொருள் கீழே விழுந்துவிடப் போகிறதே என்ற பயத்தில் வளைந்து நெளிந்து நடந்து கொண்டிருந்தார் .
பாதி தூரம் கடந்தவுடன்
"என்னால டென்ஷன் தாங்க முடியலப்பா'' என்று போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்
கூட இருந்த மற்ற அதிகார்கள்
"உன் தலையில வச்ச பேப்பர் வெயிட்ட நீ நடக்க ஆரம்பிக்கும் முன்பே நைசாக எடுத்துவிட்டோம் .
இல்லாத ஒரு பொருளுக்காக நீங்க உடம்பை வளைத்து வளைத்து நடந்த காட்சி இருக்கிறதே..!!!
ஹ ஹ ஹ ஹ ஹா.. என்று சொல்லி சிரித்தார்கள்.
.''இது நகைச்சுவை அல்ல;
இது நமது இன்றைய வாழ்வியல் கருத்தை நச்சென்று சொல்லும் விளக்கம் .
காதில் இல்லாத பூச்சிக்காகத் தன் உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்ட
மன்னனைப் போல...
இல்லாத பிரச்னையை,
இருப்பதாக நினைத்துக்கொண்டு,
நம்மில் பலபேர் நமது ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment