நவக்கிரக சூரிய பகவான் காயத்ரி; சுபிட்சம் நிலவும்; கிரக தோஷம் விலகும்!*
நவக்கிரக சூரிய பகவான் காயத்ரி மந்திரத்தை ஜபித்து வழிபடுங்கள். இல்லத்தில் சுபிட்ச ஒளி பரவும். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். சகல மங்கல காரியங்களையும் தந்தருள்வார் சூரியனார்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். சக்தியை வணங்குவதற்கு உரிய மாதம். பொதுவாகவே, வழிபாட்டுக்கு உரிய மாதம். விரதம் இருப்பதற்கும் பூஜைகள் மேற்கொள்வதற்குமான உன்னதமான மாதம்.
இந்த மாதத்தில், அறுவடையெல்லாம் முடிந்து அடுத்து விதைப்பதற்கு நிலங்கள் தயாராக இருக்கும். கோடை காலத்தில் பூமியானது பாளம் பாளமாக ஆகியிருக்கும். அதன் வழியே காற்று உள்புகுந்து நிரப்பியிருக்கும். பூமிக்குள் ஈரப்பதமானது இருந்துகொண்டே இருக்கிற இந்த நிலை, அடுத்து வரும் மழையை நன்றாகவே உள்வாங்கும். விதைக்க உகந்த மாதம். ஆடிப்பட்டம் தேடி விதை என்று அதனால்தான் சொல்லிவைத்தார்கள் முன்னோர்கள்.
அதேபோல், பாளம்பாளமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் சூரிய ஒளியானது அதில் பட்டு, இன்னும் பிடிப்புடன் இருக்கும்.
ஆடி மாதம், அம்பாளையும் ஆண்டாளையும் பெருமாளையும் முருகப்பெருமானையும் வழிபடுவதற்கு உகந்த நாட்கள். அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தக்கூடிய மாதம். ஆண்டாள் அவதரித்த மாதம். முன்னோர்களை வணங்கும் மாதம்.
இந்த அற்புதமான மாதத்தில், நவக்கிரக சூரிய பகவானை வணங்குங்கள். நவக்கிரக சூரிய பகவான் காயத்ரியை வணங்குங்கள். வாழ்வில் சகல தோஷமும் நீங்கும். சந்தோஷம் அருளுவார் நவக்கிரக சூரியனார்.
ஓம் ஏக சக்ராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்ய ப்ரசோதயாத்
எனும் நவக்கிரக சூரிய பகவான் காயத்ரியை ஜபியுங்கள்.
ஒற்றைச் சக்கரத்தில் உலகை முழுவதுமாக ஊர்ந்து சுழன்று, வினைகளையெல்லாம் சுட்டுப் பொசுக்கி, சுடரொளியால் அகிலம் மொத்தத்தையும் காக்கும் ஆதித்ய சொரூபனே உனக்கு நமஸ்காரம் என்று அர்த்தம்.
இந்த மந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை என்றில்லாமல், தினமும் காலையில் சூர்யோதயத்தின் போது சொல்லி சூரிய நமஸ்காரம் செய்து வழிபடுங்கள். கிரக தோஷங்களெல்லாம் நீங்கும். இல்லத்தில், சுபிட்ச ஒளி பரவும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.
No comments:
Post a Comment