Friday, March 5, 2021

 குலம் காக்கும் குல தெய்வம் 


ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் பல கடவுள்களை வணங்கினாலும், குல தெய்வ வழிபாடு முக்கியம். குல தெய்வத்தை வழிபடாமல், வேறு எந்த தெய்வத்தை நாடிச்சென்று வணங்கினாலும், குலதெய்வம் அணுக்கிரகம் இல்லையென்றால் புண்ணியம் இல்லை. குல தெய்வ வழிபாடுதான் ஒருவருக் 100 சதவீத பலன்களை தர வல்லது. அந்த குல தெய்வம்தான் ஒவ்வொருவரையும், அவரது குலத்தையே பாதுகாக்கும்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், தங்களது வீட்டிலேயே குல தெய்வ படத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள்.நிச்சயமாக உங்கள் குல தெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்.

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரக தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள், அதுபோல வினைகள் யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். தெய்வங்களில்மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். எத்தனைதெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.

குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும்சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூடஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறுசெய்வது தவறில்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவைஇஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்டதெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் கூடகுலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரதுகுலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான்செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்தியதேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில் பெற்று விடுகிறார்கள்.

மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாதகுலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு. குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்டபுண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும்வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள்என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்ம வினைகள் மிக அதிகமாகஇருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன. குலதெய்வம் தெரியாமல் எந்த பூஜைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரியவழிபாட்டினை செய்து வரவேண்டும்.

நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்டநாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை. குலதெய்வத்தின் அருளால் அவைசூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம்.

அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும்.

கடந்த காலங்களில் பங்காளிகளுக்குள் ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்கும் இடமாக குலதெய்வக் கோயில்கள் விளங்கின. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்ட குலதெய்வக் கோயில், அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை பரம்பரையாக முழுமுதற் கடவுளாக விளங்குகிறது. அதனால்தான் அந்த சமூகத்தில் எந்த சுபகாரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

உதாரணமாக திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிக்கை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதற்கும் பொருந்தும். ஒரு குழந்தைக்கு, குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடித்தால், அந்தக் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நம்பப்படுகிறது.

குலதெய்வமே என்னவென்று தெரியாதவர்கள் எப்படி தங்களுடைய குலதெய்வத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு வழிபடுவது.

''மனிதன் தீராத பிரச்னைகளால் மனக்கவலை வரும்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறான்.  அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்குமா என்று குடும்பப் பெரியவர்களைக் கேட்கிறான்.

 சிலர்  தங்களது குடும்ப வழக்கப்படி கோடங்கி பார்ப்பவரை அழைத்து உடுக்கடித்து தெய்வத்திடம் குறி கேட்பார்கள். சிலர் ஜாதகத்தை, குடும்ப ஜோசியரிடம் காண்பித்து, என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்பார்கள்.  அதற்கு அவர், 'உங்கள் பூர்வீக குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள், எல்லாம் சரியாகும்' என்பார்.  

சில குடும்பத்தில் குடும்பப் பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து குலதெய்வம் பற்றித் தெரிந்துகொண்டு பரிகாரம் செய்து வழிபடலாம்.

சில குடும்பத்துப் பெரியவர்களுக்குக்கூட  அவர்களின் குலதெய்வம் எது என்று தெரியாது.  அவர்கள் என்ன செய்வது? இங்கேதான் அவர்களுடைய ஜாதகம் உதவுகிறது.  ஜாதகத்தை வைத்து குல தெய்வம் கண்டுபிடிக்க முடியுமா?  நிச்சயமாக முடியும்.  

ஒருவரது ஜாதகத்தில் தெய்வ ஸ்தானம் என்பது 5-ம் இடமும் 9-ம் இடமும் ஆகும்.  5-ம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம். தந்தை வழி பாட்டனார்களைச் சொல்லுமிடம். அதன் 5-ம் இடம் ஜாதகத்தின் 9-ம் பாவமாகும். அவர்களின் இஷ்ட தேவதையைச் சொல்லுமிடம். 9-ம் இடத்துக்கு 9-ம் இடம் 5-ம் பாவமாகும்.  அதாவது தந்தை வழிபட்ட  தெய்வத்தைச் சொல்லுமிடமாகும். ஆகவே இந்த இரு இடங்களைக் கொண்டு குல தெய்வத்தைக் கண்டுபிடிக்கலாம். 

இந்த இடங்கள் ஆண் ராசியா, பெண் ராசியா எனக் கண்டுபிடித்து, அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா எனத் தெரிந்து கொள்ளலாம். மேலும் அது நில ராசியில் (ரிஷபம், கன்னி, மகரம்) உள்ளதா,  நீர் ராசியில் (கடகம், விருச்சிகம், மீனம்) உள்ளதா, என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த தெய்வம்  இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கலாம். 

நீர் ராசி என்றால், ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடங்களுக்கு அருகில் இருக்கும். நில ராசியில் நின்றால், வயல்வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் (மேஷம், சிம்மம், தனுசு) நின்றால், மலை மேல் இருக்கும். குலதெய்வம் பற்றி வீட்டின் மூத்த பிள்ளையின்  ஜாதகத்தில் இருந்து  கண்டுபிடிக்கலாம். 

ஒரு குடும்பத்துக்கு குல தெய்வம் ஒன்றும், அதன் பரிவார தெய்வங்கள் இரண்டும் சம்பந்தம் கொள்ளும். அதாவது ஒருவரின் பூர்வீகத்தில் அதாவது உங்களுக்கு முன்பு ஏழு தலைமுறைப் பங்காளிகள் மூன்று தலைமுறையாக ஒன்றுசேர்ந்து எங்கு வாழ்ந்திருக்கிறார்களோ அந்த ஊரில் இருக்கும்.  இதை குடும்பத்தில் உள்ள மூத்த பெரியவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 

சிலர் கேட்கலாம்...  எனக்கு மூத்த பெரியவர்கள் யாரும் இல்லை. இருப்பவர்களுக்கும் எங்கள் குல தெய்வம் எது என்று தெரியவில்லை. என்ன செய்வது என்று கேட்டால், அதைப் பற்றி கவலைகொள்ள வேண்டாம். 

நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய  துணி (வஸ்திரம்) சாற்றி, பூ சாற்றி  அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்டி,  “எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக” என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியவரும்.

இன்னொரு முறையும் இருக்கிறது. உங்கள் வீட்டின் தலை வாசலில் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத் துணி சாற்றி, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பூஜை செய்து மேற்சொன்னவாறு அதே வேளையில் வேண்டிக் கொண்டால், உங்கள் குல தெய்வம் பற்றி உங்களுக்குத் தெரியவரும்.

மொத்தம் மூன்று தெய்வங்கள் ஒரு குடும்பத்துக்கு வரும். அதாவது ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அது பெருமாளாக இருக்கலாம்,

சிவனாக இருக்கலாம், அம்மனாக இருக்கலாம். அடுத்து குலதெய்வம். பிறகு காவல் தெய்வமாக   ஒரு தெய்வம் - அது ஆண் தெய்வமாக இருக்கலாம் அல்லது பெண் தெய்வமாக இருக்கலாம். மொத்தத்தில் 18 ஆண் காவல் தெய்வங்களும் 18 பெண் காவல் தெய்வங்களும் இருக்கின்றனர். ஐய்யனார்,  மதுரை வீரன்,  காத்தவராயன், ஒண்டிக் கருப்பன், கருப்பண்ண சாமி, வீரனார், சங்கிலிக் கருப்பன், ஆகாய கருப்பன், ஆத்தடி கருப்பன், நொண்டிக் கருப்பன், மார்நாட்டு கருப்பன், மண்டக் கருப்பன், முன்னடிக் கருப்பன், சமயக் கருப்பன், பெரிய கருப்பன், சின்னக் கருப்பன் உள்ளிட்ட கருப்பசாமிகள் உள்ளனர். அதேபோல வீரமா காளி, குலுமாயி அம்மன், மகமாயி,  எல்லைப் பிடாரி, பெரியாச்சி, எல்லை மாரி, பேச்சியம்மன், பூவாடைக்காரி, செல்லியம்மன், கன்னிமார், சீலைக்காரி, பச்சையம்மன், துலக்கானத்தம்மன், வனதுர்கை, செல்லாயி அம்மன், காட்டேரி அம்மன், அம்முச்சியார், மாசானியம்மன்  Etc  உள்ளிட்ட பெண் தெய்வங்கள் உள்ளனர்.  இந்தக் காவல் தெய்வங்கள் அந்தந்த பகுதிக்கு ஏற்ப வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.

குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம்.  வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்யவேண்டியதைச் செய்து, வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பர். அவர்கள் உங்களிடம் அதிகம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. உங்கள் கையால் ஒரு சாதாரண அபிஷேகம், ஒரு புதுத்துணி, ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த சோறு. இதைக் கொடுத்தாலே பொதும். அவர்கள் எப்போதுமே உங்கள் வீட்டின் வாசலில் காவலாக நின்று, எந்தக் கெட்ட விஷயத்தையும் அண்ட விடமாட்டார்கள்.

No comments:

Post a Comment