ஜலதோஷம், இருமல், காய்ச்சல் – பொதுவான சில வீட்டு வைத்தியம்
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சித்தரத்தையின் சிறு துண்டை நசுக்கி வாயில் அடக்கிக் கொள்ள வேண்டும். அவ்வவ்போது உமிழ்நீரை விழுங்க வேண்டும். சளி எளிதாக வெளிவரும். தொண்டைக்கு இதமாக இருக்கும். அதிமதுரத்தை (வேர்) யும் இவ்விதம் உபயோகிக்கலாம்.
கடுக்காயை அனலிலிட்டு சுட்ட பிறகு, அதன் தோலின் சிறிதளவை மேற்சொன்னவாறு வாயிலடக்கிக் கொள்ளவும்.
ஆடாதோடையின் வேர், முசுமுசுக்கை இலை சித்தரத்தை, அதிமதுரம், ஜடமான்சி – இவற்றை சமபாகமாக எடுத்து தூளாக இடித்துக் கொள்ளவும். இந்தத் தூளில் ஒரு டம்ளர் நீரிலிட்டு அரை டம்ளராக நீர் சுருங்கும் வரை சிறு தீயில் காய்ச்சவும். கஷாய மருந்துகளை கசக்கி பிழிந்து விடவும். கஷாயத்தை வடிகட்டி பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் (11/2 தேக்கரண்டி) தேன் சேர்த்து தினமும் 4 வேளை சாப்பிட்டு வரவும். தினமும் புதிதாக செய்து கொள்ள வேண்டும். சளி குறைந்து விடும்.
வெற்றிலைக் காம்பு, கிராம்பு, ஏலரிசி இவற்றை சம எடை எடுத்து, சிறிது பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சிறு வில்லைகளாக தட்டி வெய்யிலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். இந்த வில்லைகளை மறுபடியும் பாலில் கரைத்து சூடாக்கி செய்த “களி”யை, ஜலதோஷம், இருமல், ஜுரம் உள்ளவரின் நெற்றி உச்சியில் பற்றுப்போட்டால் சளி முறியும். ஜுரம் தணியும்.
மிளகை நெய்யில் வறுத்து, ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். சிறிது வெல்லப்பாகில் இந்த மிளகை கூட்டி சுண்டைக்காய் அளவில் உருட்டி வைத்துக் கொள்ளவும். இதில் ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டு உமிழ் நீரை விழுங்கி வந்தால் இருமல் நிற்கும்.
No comments:
Post a Comment